புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்)



பழம் பெருமையும், சிறப்பும் நிறைந்த சோழநாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரத்திலே உள்ள ஒரு துறைமுகப் பட்டினம் காரைக்கால் என்பது. என்னுமொரு பழம்பெரும் துறைமுகப் பட்டினம் நாகபட்டினம் என்பது.

காரைக்காலில் பதியெழுவறியாப் பழங்குடி வணிகப் பெருமக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு தலைவராய் இருந்தவர் தனதத்தனார் என்னும் செல்வர். அவர் சிவபக்தி முதலியவற்றில் சிறந்து விளங்கினார். அவர் செய்த தவப் பயனாய் திருமகளே வந்து அவதானெனும்படி ஒரு பெண் குழந்தை அவதரித்து. அக்குழந்தைக்கு புனிதவதி என்னும் பெயர் சூட்டி மகிழ்ந்து வளர்த்தனர். பெயருக்கு ஏற்ப புனிதவதியாரும் இளம் வயதிலேயே சிவபெருமானையும், சிவனடியாரையும் பற்றிச் சிந்தித்தும், பேசியும் புனித வாழ்வு வாழ்ந்தார்.

நாகபட்டினத்தில், பல்வகைப் பெருமையோடும், செல்வத்தோடும் புகழ்பூத்து வாழ்ந்தவர் நிதிபதி என்னும் பெருவணிகர் பெருமகன். அவருக்கு பிள்ளையாய் பிறந்தவன் பரமதத்தன் என்னும் பெயர் பூண்ட குலமைந்தன்.

ஒத்த குலங்கோத்திரத்தில் பிறந்து, கரைக்காலிலே வாழ்ந்துவந்த தனதத்தனின் திருமகளாகிய புனிதவதியாரை, அவர் மணப்பருவம் அடைய, மணங்கேட்டுச் சென்ற பெரியோர்கள், பரமதத்தன் மணம்செய்ய இசைந்தனர்.

பெற்றோர் தங்களது மரபுக்கு ஏற்ப, தாதவிழ்த்தார் காளைபோன்ற பரமதத்தனுக்கு, தளிர்அடிமென் நகைமயில் போன்ற மயிலனையாள் புனிதவதியாரை கடிமணம் செய்துவைத்து, அவர்கள் நலங்கண்டு மகிழ்ந்தனர். நிதிபதியும் உயர்ந்த சிறப்பு பெற்றனன்போல் வதுவை வினைசெய்து அமைவித்தான்.

புனிதவதியார் தமக்கு ஒரே குழந்தை ஆதலின், அவர் தம்மோடு வாழவேண்டும் என்று விரும்பி, காரைக்காலிலே ஒரு மடம் சமைத்து, அவர்களை அங்கே இருந்துகொண்டு இல்லறம் நடத்தக் கண்டு மகிழ்ந்தார் தனதத்தனார்.

பரமதத்தன் புனிதவதியாரை திருமணம் செய்து, அவரோடு இல்லறம் இனிது செல்லும்போது, ஒரு மாங்கனியால் விளைந்த வினையால் பிரிந்து வாழ்ந்தான்.

காரைக்கால் அம்மையார் இறைவருடைய திருவடிகளிலே, அவர் எண்டோள் வீசி அண்டமுற ஆடும்போது, தாளம் போட்டு, அவரடியான் கீழ் பாடிக்கொண்டிருக்கிறார். இதனை கோவில்களில் உள்ள திருமேனியில் காணலாம்.