சேக்கிழார் நாயனார் புராணம்

திருச்சிற்றம்பலம்
கொற்றங்குடி உபாபதி சிவாசாரியார் அருளிச்செய்த
திருதொண்டார் புராண வரலாறு என்னும்
சேக்கிழார் நாயனார் புராணம்

பாயிரம்

விநாயகர்
வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம். (1)

சபாநாதர்
சீராருஞ் சதுர்மறையும் தில்லைவா ழந்தணரும்
பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த
வராருங் கடல்புடைசூழ் வையமெலாம் ஈடேற
ஏராரு மணிமன்றுள் எடுத்ததிரு வடிபோற்றி. (2)

சிவகாமசுந்தரி
பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்
சிரந்தழுவு சைவநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க
அரந்தைகெடப் புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி. (3)

கற்பக விநாயகர்
மலரயனும் திருமாலும் காணாமை மதிமயங்கப்
புலிமுனியும் பதஞ்சலியும் கண்டுதொழப் புரிசடையார்
குலவுநடந் தருந்தில்லைக் குடதிசைக்கோ புரவாயில்
நிலவியகற் பகக்கன்றின் நிரைமலர்த்தா ளிணைபோற்றி. (4)

சுப்பிரமணியர்
பாறுமுக மும்பொருந்தப் பருந்துவிருந் துணக்கழுகு
நூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத
மாறுமுகந் தருநிருதர் மடியவடி வேலெடுத்த
ஆறுமுகன் திருவடித்தா மரையிணைக ளவைபோற்றி. (5)

சைவ சமயாசாரியர்
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி. (6)

திருத்தொண்டர் - சேக்கிழார்
தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாந் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழா ரடிபோற்றி. (7)

நூற்பெயர்
தாய்மலர்ந்த முகத்தினளாய்த் தழுவிமுலை தரவந்த
நோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாமல் உலகுய்யத்
தீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார்
வாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம். (8)

அவையடக்கம்
ஊர்க்கடலை இவனெனவந் துதித்தான் ஓங்குதமிழ்
நூற்கடலைக் கரைகண்டு நுவலநினைக் குமதுதிருப்
பாற்கடலைச் சிற்றெறும்பு பருகநினைப் பதுபோலும்
நீர்க்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினைக் குமதொக்கும். (9)

தேவுடனே கூடியசொல் செழுந்தமிழோர் தெரிந்ததுரைத்த
பாவுடனே கூடியஎன் பருப்பொருளும் விழுப்பொருளாம்
கோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர்புகுதும்
பூவுடனே கூடியநார் புனிதர்முடிக் கணியாமால். (10)

நூல்
பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும் பாளைவிரி மணங்கமழ் பூஞ்சோலை தோறும்
காலாறு கோலிஇசை பாடநீடும் களிமயில்நின் றாடும்இயல் தொண்டை நாட்டுள்
நாலாறு கோட்டதுப் புலியூர்க் கோட்டம் நன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க
சேலாறு கின்றவயற் குன்றத் தூரில் சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே. (11)

மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால் வணிகன் உயிரிழப்பத் தாங்கள்
கூறியசொல் பிழையாது துணிந்து செந்தீக் குழியலெழு பதுபேரும் முழுகிக் கங்கை
ஆறணிசெஞ் சடைத்திருவா லங்காட் டப்பர் அண்டமுற நிமிர்ந்தாடும் அடியின் கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால் பிரித்தளவிட் டிவளவெனப் பேசலாமோ. (15)

காராளர் அணிவயலில் உழுது தங்கள் கையார நட்டமுடி திருந்தில் இந்தப்
பாராளுந் திறல்அரசர் கவித்த வெற்றிப் பசும்பொன்மணி முடிதிருத்துங் கலப்பை பூண்ட
எரால் எண்டிசை வளர்க்கும் புகழ்வே ளாளர் ஏரடிக்கஞ் சிறுகோலால் தரணி யாளச்
சீராரு முடியரசர் இருந்து செங்கோல் செலுத்துவர்வே ளாளர்புகழ் செப்ப லாமோ. (16)

கருங்கடலைக் கைநீத்துக் கொளஎளிது முந்நீர்க் கடற்கரையின் நொய்மணலை எண்ணி அளவிடலாம்
பெருங்கடல்மேல் வருந்திரையை ஒன்றிரண்டென் றெண்ணிப் பிரித்தெழுதிக் கடையிலக்கம் பிரித்துவிட லாகும்
தருங்கடலின் மீனைஅள விடலாகும் வானத் தாரகையை அளவிடலாம் சங்கரன்தாள் தமது
சிரங்கொள்திருத் தொண்டர்புராணத்தைஅள விடநஞ் சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கும் அரிதே. (51)

அண்ட வாணரெதிர் தொண்ட னாகஅனை வரும்வி ழுந்துபின் எழுந்துசீர்
கொண்ட சேவைகுல திலக ருக்கனைவ ருங்கு றித்தெதிர் கொடுத்தபேர்
தொண்டர் சீர்பரவு வாரெ னப்பெயர் சுமத்தி ஞானமுடி சூட்டிமுன்
மண்ட பத்தினி லிருத்தி மற்றவரை வளவர் பூபதி வணங்கினான். (95)

அண்ட வாணர்தொழு தில்லை யம்பலவர் அடியெடுத்து “உலகெலாம்” எனத்
தொண்டர் சீர்பரவு சேக்கிழான் வரிசை துன்று குன்றைநக ராதிபன்
தண்ட காதிபதி திருநெறித் தலைமை தங்கு செங்கைமுகில் பைங்கழல்
புண்ட ரீகமலர் தொண்ட னிட்டுவினை போக்கு வார்பிறவி நீக்குவார். (103)

திருச்சிற்றம்பலம்

(கொற்றங்குடி உமாபதி சிவாசாரியார் பாடிய சேக்கிழார் புராணம் என்னும் திருத்தொண்டர் புராண வரலாற்று நூலின் மொத்தச்செய்யுள்களின் எண்ணிக்கை 103)