திருமயிலாப்பூர்

இறைவர் : கபாலீசுவரர்நாதர்
இறைவி : கற்பகாம்பாள்

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : கபாலி தீர்த்தம்
தலமரம் : புன்னை

அளவான கோயில். கிழக்கே வர்ணச் சித்திரங்களால் அமைந்த புராண-இதிகாச வரலாறுகளை விளக்கும் சிற்பங்களைக் கொண்ட 7 நிலை இராச கோபுரம். கோயில் மேற்கு நோக்கிய சந்நிதி உடையது. சுவாமி சந்நிதியில், கோயிலுக்கு வெளியே, பெரிய தீர்த்தக் குளம் உண்டு. அம்மன் சந்நிதி தனியாக, கிழக்கு பார்த்தபடி உளது. பார்வதி அம்மையார், மயில் உருக்கொண்டு, புன்னை மரத்தின்கீழ் இறைவனை வழிபட்ட சந்நிதி, வடக்குச் சுற்றில், மேற்கு பார்த்தபடி உண்டு.

சிங்கராவேலர் என்னும் முருகன் கோயில், தனியே பெரிதாக, மேற்கு பார்த்தபடி சிறப்பாக உளது. எதிரே திருச்சுற்று மாளிகையோடு, அருணகிரிநாத சுவாமிக்கு சிறிய தனிச் சந்நிதி உண்டு.

மயிலாப்பூரின் சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்து, கடல் ஓடி, திரவியம் கொண்ட சிவநேச செட்டியாரின் தவப்புதல்வி பூமகளன்ன பூம்பாவை, இறைவருக்கு திருப்பள்ளித் தாமம் எடுக்கும்போது, அரவம் தீண்டி உயிர் நீக்க, அவள் உடலை தகனம் செய்து, எலும்புகளை ஒரு கலசத்தில் வைத்திருந்தார். திருமயிலாப்பூருக்கு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எழுந்தருளிய போது, அந்த எலும்புகளை அவர் முன்னிலை வைத்து வேண்ட, அவர், “மட்டிட்ட” என்னும் திருப்பதிகம் பாடி, மீண்டும் பெண் ஆக்கினார். பிள்ளையார், உடைந்த கலசம், கலசத்தில் இருந்து வெளியே வந்த பூம்பாவை முதலியவர்களின் சிலா வடிவங்கள் தனிச் சந்நிதியில் உண்டு.

கோயில் தளவரிசைக் கற்களால் ஆனவை. இங்கு அவதரித்த வாயிலார் நாயனாருக்கு தனிச் சந்நிதி உண்டு. இங்கிருந்து ½ கி.மீ தூரத்தில், இங்கு வாழ்ந்த திருவள்ளுவர் கோயில் உண்டு. இப்பகுதியில் காரணீசுரர் முதலிய ஏழு கோயில்களை ஒரே நாளில் வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பர். இங்கு அறுபத்து-மூவர் தாமிர சிலா விக்கிரகங்கள் உண்டு. அவரவர் குருபூசைகள் சிறப்பாக நிகழ்ந்து, ஒழுங்காக வீதிவலம் வருதல், தனிச் சிறப்பு. நவராத்திரி ஒன்பது நாளும், கற்பகாம்பாள் தனி அலங்காரங்களுடன் சிறப்பாக காட்சி தருவார்.

பிரமோற்சவத்தில், அதிகார நந்தி சேவையும், அறுபத்து-மூவர் திருவிழாவும், பூம்பாவையை எழுப்பிய திருவிழாவும் மிகச் சிறந்தன. இங்கு பள்ளியறைப் பூசை சிறப்பு. தினமும் பள்ளியறைக்கு திருவடிகள் எழுந்தருளும் போது, திருவாசக சிவபுராணம் படிப்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்த அந்தணர்கள் பக்தி-பூர்வமாக, நேரம் தவறாது, நியதி தவறாது செய்துவரும் பூசனைகள் பார்க்க வேண்டியன. சென்னை மாநகருக்கு திலகம் போல விளங்கும் இக்கோயில் எழில் மிக்கது.

பயண வசதிகள் மிகுதியாக உண்டு. சென்னை எழும்பூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 7 கி.மீ தூரம். பயணப் பேருந்து வசதிகள் நாற்றிசையிலும் இருந்து உண்டு.

தொண்டைநாடு : 24