இறைவர் : மாணிக்கவண்ணர்
இறைவி : வண்டுவார்குழலி
பதிகம்
: சம்பந்தர் 2
+ அப்பர் 1 = ஆக 3
தீர்த்தம் : மாணிக்கத் தீர்த்தம்
தலமரம் : மருகல்
கோயில்
பெரிது. மாடக்கோயில். தாமன் என்னும் வணிகனால் வஞ்சிக்கப்பட்ட செட்டிப்பிள்ளையோடு,
அவனில் இரக்கம் கொண்ட தாமனின் கடைசிப் பெண், அவனை திருமணம் செய்ய, அவனோடு வந்து,
திருமருகல் கோயிலில் தங்கி இருக்கும்போது, அவனைப் பாம்பு தீண்ட, அவன் உயிர்
துறந்தனன். பிரிவு ஆற்றாது, மனைவி அழுது புலம்ப, சம்பந்தர் அவளில் கருணை கொண்டு,
பதிகம் பாடி, செட்டிப்பிள்ளையை உயிர்ப்பித்து, அவர்கள் இருவருக்கும் திருமணம்
செய்து வைத்த தலம். தேவி திருமுன்னுக்கு நேரே, வீதியில் விடந்தீர்த்த விநாயகர்
எழுந்தருளி உள்ளார். சிறுத்தொண்ட நாயனாரின் செல்வன் சீராளன், பைரவருக்கு
நரபலியாகும் போது, அவன் படித்த பள்ளிக்கூடம் இங்கு இருந்தது. இது இன்று வேறு
தேவைக்காக பயன்படுத்தப் படுகிறது. பக்கத்தில் உள்ள குளம் சீராளம் குளம்
எனப்படுகிறது. கோயிலைச் சேர்ந்து ஒரு மடம் இருக்கிறது. சிறுத்தொண்டர் சீராளனைக் கூட்டிவரச்
சென்றபோது, அவன் அம்மடத்தில் தான் இருந்தான் என்கின்றனர்.
பயண
வசதிகள் உண்டு. திருப்புகலூர்-திருச்சாத்தமங்கை பாதை பேருந்துகள், திருமருகல்
கோயில் அருகால் செல்கின்றன. திருப்புகலூரில் இருந்து ஆற்றைக் கடந்து,
இராமனதீச்சரம், திருச்செங்காட்டங்குடி, திருமருகல் வழியே, திருச்சாத்தமங்கை வரை
பேருந்திலும், கால் நடையாகவும் செல்லலாம். செங்காட்டங்குடியில் இருந்து 3½ கி.மீ.
சோழநாடு,
காவிரி தென்கரை : 80