திருப்பைஞ்ஜீலி

இறைவர் : நீலகண்டர், ஞீலவனேசுவரர்
இறைவி : விசாலாட்சி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 3
தலமரம் : ஞீலி

ஸ்ரீஞீலவனேசுவர ஆலயம். பெரிய கோயில். திருப்பைஞ்ஜீலிச் சிவபெருமான், நாவுக்கரசருக்கு கட்டமுது தந்த வரலாறு அழகிய ஓவியமாக, கோயிலில் தீட்டப் பட்டுள்ளது. இராச கோபுரத்துக்கு எனப் பெரிய அளவில் அதிட்டானம் போடப்பட்டுள்ளது. ஆனால் அது பல ஆண்டுகள் கழிந்து, இன்றும் மொட்டைக் கோபுரமாகவே உள்ளது. உள்ளே 3 நிலைக் கோபுரம் உண்டு. தலமரம் ஞீலி (ஒரு வகைக் கல்வாழை). வாகனங்கள் உண்டு. அம்பாள் கோயில் கிழக்கு பார்த்தபடி. சுவாமி கோயில் இடது பக்கம் தனியாக உண்டு. அப்பருக்கு கட்டமுது கொடுத்த திருவிழா, அவருடைய குருபூசைத் தினமாகிய (Incomplete)

சோழநாடு, காவிரி வடகரை : 61

திருஓமாம்புலியூர்

இறைவர் : துயரம்தீர்த்தநாதர்
இறைவி : பூங்கொடி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தீர்த்தம் : தீர்த்தம்

அளவான கோயில். மண்ணிப்படிக்கரை ஆற்றிற்கு மேற்குக்கரையில் இருக்கிறது. தக்ஷிணாமூர்த்தி பெரிய அளவில், மகாமண்டபத்தில், வடக்குப் புறத்தில், தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். தக்ஷிணாமூர்த்தியிடம் அம்மையார் பிரவண மறை கேட்டருளிய தலம். புலிக்கு அஞ்சிய வேடன் ஒருவன், ஒரு குளத்தங்கரையில் உள்ள மரத்தில் ஏறி, இரவு முழுவதும் கண் விழித்திருப்பதற்காக, அம்மரத்தில் இருந்து இலைகளை ஒவ்வொன்றாக கீழே போட்டு வந்தான். அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது, மரம் வில்வ மரமாகவும், அதன் கீழே இருந்தது சிவலிங்கம் ஆகவும், அவன் பறித்துப் போட்ட வில்வத்தளிர்கள் சிவலிங்கத்தில் வீழ்ந்ததாகவும், அன்று இரவு முழுவதும் அவனுக்கு வேட்டை (Incomplete).

சோழநாடு, காவிரி வடகரை : 31

திருமீயச்சூர் இளங்கோயில்

இறைவர் : சகலபுவனேசுவரர்
இறைவி : மின்னுமேகலாம்பாள்

பதிகம் : அப்பர் 1

கோயில் சிறிது. இளங்கோயில் என்பது பாலாலயம். திருக்கோயில்களிலே பெருமளவில் திருப்பணி செய்யப்படும் போது, முக்கியமான மூர்த்திகள், பூசனை முதலியவற்றை வழக்கம்போல செய்வதற்கு, வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப் பெறுவார். அப்போது அக்கிரியை “வாலஸ்தாபனம்” என்பர். பாலஸ்தாபனம் செய்யப்படும் கோயில், “பாலாலயம்”. தமிழில் “இளங்கோயில்” எனப்படும். திருப்பணி நிறைவேறி, திருக்குட முழுக்கும் செய்தபின், பாலாலயம் அழிக்கப்படுவது வழக்கம். ஆனால் மீயச்சூரில் பாலாலயம் அழிக்கப்படாது, பேணப்பட்டு வருகிறது. (திருவாலங்காட்டில் எழுப்பப்பட்ட பாலாலயம் அளவில் சிறியது). திருமேனிகள் பழைய இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளன. ஆனால் சிற்றாலயம் பேணப்பட்டு வருகிறது. இறைவர், இறைவி பாலாலயத்தில் எழுந்தருளி இருக்கும்போது நாவுக்கரசர் தரிசித்து, பதிகம் பாடினர் ஆதலின் பாலாலயம் அழிக்கப்பெறாது, பாதுகாக்கப்பட்டு, தனிக்கோயிலாக இருந்து வருகிறது. பாலாலயம் இருக்கும் இடம்.

பயண வசதிகள் உண்டு. மேலே பெரிய கோயிலுக்குப் போலக் கொள்க.

சோழநாடு, காவிரி தென்கரை : 57

திருப்புகலூர்

இறைவர் : அக்கினீசுவரர், புகலூர்ப்புண்ணியன், கோணப்பிரான்
இறைவி : கருந்தாட்குழலி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 5 + சுந்தரர் 1 = ஆக 8
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்

கோயிலும், கோபுரமும் பெரியன. கிழக்கு, மேற்கு, வட புறங்களில் கல்லால் கட்டப்பட்ட அகழி இருக்கின்றது. இறைவர் சுயம்பு. சற்றே சரிந்திருக்கிறார். சந்திரசேகர் கோயில் சிறப்பாய் உள்ளது. எதிரில் அக்கினி தேவர் திருவுருவம் உண்டு. திருநாவுக்கரசர் அங்கு எழுந்தருளி உள்ள சிவனோடு கலந்து, “புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே” என்று போற்றி, “நண்ணரிய சிவானந்த ஞான வடிவே” ஆகினார். அவருடைய திருமேனிகள் மிகமிக சாந்நித்தியமாக விளங்குகின்றன. அவர் உழவாரத் தொண்டு செய்யும்போது, அவரை மயக்கத் தோன்றிய பொன்னையும், மணிகளையும் கையினால் தீண்டாது, உளவாரத்திலேயே ஏந்தி, “பூங்கமல வாவியினப்புக” எறிந்தார். தேவமாதர் விண்ணில் இருந்து இறங்கி, ஆடல்-பாடல்களால் அவரை மயக்க முயன்றபோது, “நான் திருவாரூர் ஐயனுக்கே அல்லால் உங்களுக்கு ஆட்படேன்” என்று பாட, அவர்கள் தோற்று மீண்டனர். இங்கு சித்திரை சதயத்தை முன்னிட்டு, பத்து நாள், நாவுக்கரசரது வாழ்க்கையை விபரிக்கும் திருவிழா (திருவதிகையில் போல்) நிகழ்கிறது. வைகாசி விசாகத்தை வைத்து, பத்து நாள் பிரமோற்சவம் நிகழுகிறது. சுந்தரர் தலையணையாக வைத்துப் படுத்த செங்கல், பொற்கற்களாக மாறின. முருகநாயனார் பிறந்து, பூக்கள் எடுத்து, விதம் விதமான மாலைகள் புனைந்து, இறைவர்க்கு கொடுத்து, பேறு அடைந்த திருத்தலம். இங்கு அவருடைய திருமடம் ஒன்று இருந்தது. அம்மடத்தில் நாயனார், சம்பந்தர், நாவுக்கரசர், சிறுத்தொண்டர், நீலநக்கர் முதலிய நாயன்மார்களையும் எழுந்தருளச் செய்து, அவர்களுக்கு பலநாள் அமுது படைத்தது, உபசரிக்கும் பெரும்பேறு பெற்றவர்.

பயண வசதிகள் பல உண்டு. நன்னிலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து கி.மீ. மயிலாடுதுறை, வேதாரணியம் முதலிய இடங்களில் இருந்து பேருந்துகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 75

திருப்புள்ளிருக்குவேளூர் (வைதீஸ்வரன் கோயில்)

இறைவர் : வைத்தியநாதர்
இறைவி : தையல்நாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 2 = ஆக 3
தீர்த்தம் : சித்தாமிர்த தீர்த்தம்
தலமரம் : வேம்பு

பெரிய கோயில். 2 பெரிய கோபுரங்கள். புள் (சடாயு, சம்பாதி என்னும் பறவைகளும்), இருக்கு (வேதம்), வேள் (முருகன், சூரியன்) பூசித்த படியால் இப்பெயர் வந்தது. இது வைத்தீஸ்வரன் கோயில் என வழங்கப்பெறுகிறது. மேற்கு நோக்கிய சந்நிதியில் சித்தாமிர்தம் என்னும் பெரிய தீர்த்தக் குளம், நீராழி மண்டபத்தோடு உண்டு. தேவலோகத்தில் சித்தர்கள் கூடி, சிவனுக்கு செய்த அபிஷேக தீர்த்தம், ஒன்று கூடி இங்கு வந்து சேர்ந்தமையால், இப்பெயர் ஆயிற்று. தீராத நோய்களை தீர்த்து அருளும் இயல்பு இதற்கு உண்டு. இறைவருக்கு வைத்தியநாதர் என்று பெயர். இங்கே செல்வமுத்துக்குமாரர் சந்நிதி மிகச்சிறப்பு. மாதம் தோறும் வரும் கார்த்திகை நக்ஷத்திரத்தில், முற்பகல் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு பெரிய திருமுழுக்கு, சிறப்பு விழா முதலியன வசந்த மண்டபத்தில் நிகழும். இரவு வெள்ளி ரத்தத்தில் திருவீதிவலம் வருவர். திருமுழுக்கு ஆட்டிய பன்னீர், பால், சந்தனம் முதலியன சேர்ந்த கலவைத் தீர்த்தத்தை, அடியார் வாங்கி உட்கொள்வர். பலவித நோய்கள் தீர்ந்துவிடும். செவ்வாய் கிரகம் இறைவனைப் பூசித்து, பேறு பெற்றதனால், இத்தலம் அங்காரக தோஷ நீக்கத்துக்கு புகழ் பெற்றது. அங்காரகன் சிலா, தாமிர விக்கிரகங்கள் தனித்தனியே உண்டு.

பயண வசதிகள் பல உண்டு. சிதம்பரம்-மயிலாடுதுறை பாதையில், சீகாழியில் இருந்து 6 கி.மீ தூரத்தில் உண்டு. சிதம்பரம்-மயிலாடுதுறை வழிப் பேருந்துகள் வைதீஸ்வரன் கோயில் கிழக்கு திருவாயிலில் நின்றே, அப்பாற் செல்லும். இருப்புப்பாதை நிலையம் ½ கி.மீ தூரத்தில் இருக்கிறது. இங்கிருந்து திருப்புன்கூர் 4 கி.மீ. திருக்கண்ணார் கோயில் கி.மீ. இங்கிருந்து பட்டவர்த்தி வழியே கும்பகோணம் செல்லும் பேருந்துகள் திருப்புன்கூர், திருப்பனந்தாள், ஸ்ரீகாசிமடம், சேய்ஞ்ஞலூர், திருவிடைமருதூர், திருபுவனம் முதலிய தலங்கள் ஊடகச் செல்லும்.

சோழநாடு, காவிரி வடகரை : 16

திருப்புன்கூர்

இறைவர் : சிவலோகநாதன்
இறைவி : சொக்கநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 3

பெரிய கோயில். பெரிய இராச கோபுரம். 2 கி.மீ தெற்கே உள்ள ஆதனூரில் பிறந்து, வளர்ந்த திருநாளைப்போவார் நாயனார் இத்தலத்துக்கு தினமும் சென்று, புறத்தே நின்று வழிபாடு செய்வார். ஒருநாள் இவர் வழக்கம்போல வெளியே நின்று வழிபாடு செய்யும்போது, இறைவர் தம்முன் இருந்த மிகப்பெரிய நந்தியை விலகச் செய்து, காட்சி கொடுத்தது அருளினார். கோயிலின் கிழக்கில், கோபுரத்தின் முன், திருக்குளத்தின் அருகே அவர் நின்று கும்பிட்ட இடத்தில் ஒரு சிறு சந்நிதியில், சிரசின்மேல் கூப்பிய கைகளோடு நின்று, கருவறையில் உள்ள மூலவரை முழுமையாக நேரே தரிசிக்கும் நிலையில் உள்ள திருமேனி, ஏந்திய கைகளுடன், தனிச் சந்நிதியில் எழுந்தருளி உள்ளார். கோயிலுக்கு வெளியே கிழக்கே உள்ள குளத்தை விட, மேற்கே பள்ளமாக இருந்த நிலத்தில், வேறொரு குளத்தை வெட்டி, திருப்பணி செய்தார். சுந்தரரும், ஏயர்கோன் கலிக்காமரும், தனித்தனியே உள் சென்று வழிபட்ட தலம். முதல் மழை பெய்யவும், பின் நிற்கவும் சுந்தரர் பதிகம் பாடினார். கலிக்காமர் இறைவருக்கு 12 வேலிநிலம் வழங்கினார். அவர் அவதரித்த திருப்பேறுமங்கலம், திருப்புன்கூருக்கு வடக்கே 2 கி.மீ தொலைவில் உண்டு. அங்கே ஒரு சிறு சிவாலயம் உண்டு. அங்கே கலிக்காமருக்கு தனிச் சந்நிதி உண்டு.

பயண வசதிகள் உண்டு. வைதீஸ்வரன் கோயிலில் இருந்து கும்பகோணம் சாலையில் 2 கி.மீ தூரம் சென்று, திருப்புன்கூரை அடைந்து, அங்கிருந்து இங்கு செல்லலாம். மணல்மேடு, கும்பகோணம் பேருந்துகள் இவ்வழியே செல்கின்றன.

சோழநாடு, காவிரி வடகரை : 20

திருமருகல்

இறைவர் : மாணிக்கவண்ணர்
இறைவி : வண்டுவார்குழலி

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 1 = ஆக 3
தீர்த்தம் : மாணிக்கத் தீர்த்தம்
தலமரம் : மருகல்

கோயில் பெரிது. மாடக்கோயில். தாமன் என்னும் வணிகனால் வஞ்சிக்கப்பட்ட செட்டிப்பிள்ளையோடு, அவனில் இரக்கம் கொண்ட தாமனின் கடைசிப் பெண், அவனை திருமணம் செய்ய, அவனோடு வந்து, திருமருகல் கோயிலில் தங்கி இருக்கும்போது, அவனைப் பாம்பு தீண்ட, அவன் உயிர் துறந்தனன். பிரிவு ஆற்றாது, மனைவி அழுது புலம்ப, சம்பந்தர் அவளில் கருணை கொண்டு, பதிகம் பாடி, செட்டிப்பிள்ளையை உயிர்ப்பித்து, அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்த தலம். தேவி திருமுன்னுக்கு நேரே, வீதியில் விடந்தீர்த்த விநாயகர் எழுந்தருளி உள்ளார். சிறுத்தொண்ட நாயனாரின் செல்வன் சீராளன், பைரவருக்கு நரபலியாகும் போது, அவன் படித்த பள்ளிக்கூடம் இங்கு இருந்தது. இது இன்று வேறு தேவைக்காக பயன்படுத்தப் படுகிறது. பக்கத்தில் உள்ள குளம் சீராளம் குளம் எனப்படுகிறது. கோயிலைச் சேர்ந்து ஒரு மடம் இருக்கிறது. சிறுத்தொண்டர் சீராளனைக் கூட்டிவரச் சென்றபோது, அவன் அம்மடத்தில் தான் இருந்தான் என்கின்றனர்.

பயண வசதிகள் உண்டு. திருப்புகலூர்-திருச்சாத்தமங்கை பாதை பேருந்துகள், திருமருகல் கோயில் அருகால் செல்கின்றன. திருப்புகலூரில் இருந்து ஆற்றைக் கடந்து, இராமனதீச்சரம், திருச்செங்காட்டங்குடி, திருமருகல் வழியே, திருச்சாத்தமங்கை வரை பேருந்திலும், கால் நடையாகவும் செல்லலாம். செங்காட்டங்குடியில் இருந்து கி.மீ.

சோழநாடு, காவிரி தென்கரை : 80

திருக்கருவிலிக்கொட்டிட்டை

இறைவர் : சற்குணநாதேஸ்வரர்
இறைவி : சர்வாங்கநாயகி

பதிகம் : அப்பர் 1

அளவான கோயில். கருவிலி என்பது தலத்தின் பெயர். கொட்டிட்டை என்பது கோயிலின் பெயர். இங்கு இறைவனை வழிபட்டோர் மீண்டும் பிறவி எடுக்கமாட்டார் என்பர்.

வன்னியூருக்கு தெற்கே 4 கி.மீ. கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ. வழியில் 10 கி.மீ தூரத்தில் நறையூர்ச் சித்தீச்சரம் இருக்கிறது. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 63

திருமழபாடி

இறைவர் : மழபாடி மாணிக்கம், வச்சிரதம்பநாதர்
இறைவி : அழகம்மை, சௌந்தரநாயகி

பதிகம் : சம்பந்தர் 3 + அப்பர் 2 + சுந்தரர் 1 = ஆக 6
தீர்த்தம் : கொள்ளிடம்
தலமரம் : பனை

பெரிய கோயில். 7 நிலை இராச கோபுரம். கொள்ளிடக் கரையில் பெரிய சுற்று மதில்கள். உள்ளே 5 நிலைக் கோபுரம். இரண்டு கோபுரங்களுக்கும் இடையில் நந்தி மண்டபம். இது திருமழபாடி வைத்தியநாத கோயில் எனவும் வழங்கப்படுகிறது. வடக்கில் அம்மை கோயில் தனியே உளது. கோயில் முதலாம் இராசராச சோழனால் கட்டப்பட்ட சிறு கோயில்களுள் ஒன்று. நந்தி தேவருக்கும், சுயரை இருவருக்கும், பங்குனிப் புனர்பூசத்தில் திருக்கல்யாணம் நிகழ்ந்த தலம். ஐயாறப்பர் அன்று இங்கு எழுந்தருளி நடத்தி வைத்திருக்கிறார். இதனாலே, நந்திதேவரும், சுயசை தேவியாரும் சித்திரைப் பௌர்ணமியில் திருவையாறுக்கு எழுந்தருளி, ஐயாறப்பர்-தேவியோடு ஏழூர் செல்லும் விழா நடைபெறுகிறது.

காலையில் ஐயாறப்பரும், தேவியாரும், நந்திதேவரும், தேவியாரும், வெவ்வேறு பல்லக்கில் புறப்பட்டு, திருப்பழனம் எழுந்தருளி, பின் முறையே, திருச்சொற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர் முதலிய தலங்களில் எழுந்தருளி, சிறப்புப் பூசனைகளில் அமுது முதலியன ஏற்றருளி, திருப்பூந்துருத்தி எழுந்தருளுவர். ஐவரும், அவர்கள் தேவியாரும் அன்று இரவு அங்கு தங்கி, பூசனைகளை ஏற்று, பள்ளி கொள்வர். அடியார்களில் சிலர் திருப்பூந்துருத்தியிலும், ஏனையோர் காவிரிப் படுக்கையில் முழுநிலவில் ஓய்வு எடுப்பார்.

அடுத்த நாள் காவிரியில் தீர்த்தம் ஆடிய பின், புது அலங்காரங்களுடன், ஆறு புஷ்பப் பல்லக்குகளில், ஏழாவது தலமாகிய திருநெய்த்தானம் செல்வர். அங்கு பூசனை, அமுது படைத்தல் முதலியன முடிந்தவுடன், கடைசித் தலமாகிய திருவையாற்றை நோக்கி, எட்டுப் பல்லக்குகளும் செல்லும் காட்சி ஒரு அருமையான காட்சியாகும். காலை ஒன்பது மணியளவில், எட்டுப் பல்லக்குகளில், ஒரே வரிசையில் நின்று, பக்தகோடிகளுக்கு தரும் காட்சி, ஒரு அரிய அற்புதக் காட்சி ஆகும். தவறாது பார்த்து, தரிசிக்க வேண்டியது ஒன்றாகும்.

இறைவர் சுந்தரரை, “இப்பதியை தரிசிக்க மறந்தனையோ?” என்று கேட்க, அவர் உடனே இங்கு எழுந்தருளி, “பொன்னார் மேனியனே” என்று பதிகம் பாடி, மகிழ்ந்த தலம். புருஷா மிருகம் தாபித்த இலிங்கத்தை, அவனால் எடுக்க முடியாததால், “வச்சிரதம்பமூர்த்தி” எனப் பெயர் பெற்றார்.

பயண வசதிகள் பல உண்டு. புள்ளம்பாடி, தஞ்சாவூர் இருப்புப்பாதை நிலையங்களில் இருந்தும், திருவையாற்றில் இருந்தும் பேருந்துகள் உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 54

திருமயிலாடுதுறை

இறைவர் : மாயூரநாதர், வள்ளலார்
இறைவி : அபயாம்பிகை, அஞ்சல்நாயகி

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 1 = ஆக 3
தீர்த்தம் : காவேரி, இடப் தீர்த்தம்
தலமரம் : மா

கோயில் பெரிது. “ஆயிரம் ஆனாலும், மாயூரம் ஆகாது” என்பது பழமொழி. இறைவி மயில் உருக்கொண்டு இறைவனை வழிபட்ட தலம். இங்கே கௌரிக்காக இறைவன் கெளரி தாண்டவம் ஆடினார். துலா (ஐப்பசி) மாதத்தில், இத்தலத்தில் காவிரியில் தீர்த்தம் ஆடுவது சிறப்பு. கோயிலுக்கு உள்ளும் திருக்குளம் இருக்கிறது. இங்கு முருகப்பெருமான் சந்நிதி சாந்நித்தியம். கந்தசட்டி விழா சிறப்பாக அநுட்டிக்கப் படுகிறது. மயிலாடுதுறை துலா ஸ்நாந கட்டத்துக்கு வடக்கே 2 கி.மீ தூரத்தில் உள்ள வள்ளலார் கோயிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சந்நிதி குறிப்பிடத்தக்கது. தருமபுர ஆதீன 10-ம் மகாசந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவஞான தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், இங்கு எழுந்தருளிய தக்ஷிணாமூர்த்தி மீது பாடிய திருவருட்பா சொல் இன்பம், பொருள் இன்பம், இசை இன்பம் மிக்கது. இங்கு காவிரியின் இடப தீர்த்தக் கரையில் ஆலயத்தில் விசுவநாதர், துண்டி விநாயகர், பைரவர் முதலியோர் காசியில் போலவே இங்கும் எழுந்தருளி உள்ளனர். காசிக்கு செல்ல இயலாதவர், இங்கு தீர்த்தம் ஆடி, வழிபாடு செய்தால், காசியில் செய்த பயனைப் பெறுவார். சிவபெருமான் நந்தியெம்பெருமான் மீது, யோகாசனத்தில் ஞான முத்திரையுடன் வீற்றிருக்கும் திருக்கோலம் பார்த்து தரிசிக்கத் தக்கது. காவிரியின் செழிப்பினால் எங்கும் தோப்புக்கள், சோலைகள், வயல்கள் சூழ்ந்திருக்கின்றன.

பயண வசதிகள் மிக்க உண்டு. மயிலாடுதுறையில் இருந்து நான்கு திசைகளிலும் உள்ள தரங்கம்பாடி, சிதம்பரம், தஞ்சாவூர், திருவாரூர், இன்னும் திருப்புன்கூர் வழி கும்பகோணம் முதலிய இடங்களுக்கு செல்லும் ரயில், பேருந்துகள் சந்திக்கும் இடம். இவை நிறைய உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 39

திருஆழம்பொழில்

இறைவர் : ஆதம்நாதர்
இறைவி : ஞானாம்பிகை

பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : காவிரி
தலமரம் : ஆல்

கோயில் சிறிது. திருச்சுற்று மதில் பெரிது. ஒரே ஒரு பிராகாரம். மேற்கு பார்த்த சந்நிதி. எதிரில் பெரிய தாமரைக் குளம் உண்டு.

தஞ்சாவூர் இருப்புப்பாதை சந்திப்பு நிலையத்தில் இருந்து திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி வழியே, திருவையாறு செல்லும் சாலையில் 15 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 10

திருஆவடுதுறை

இறைவர் : மாசிலாமணியீசர்
இறைவி : ஒப்பிலா முலையம்மை

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 5 + சுந்தரர் 2 = ஆக 8
தீர்த்தம் : கோமுகி
தலமரம் : அரசு

பெரிய கோயில். மிகப்பெரிய நந்தி. புகழ்மிக்க தி.க.ப. திருவாவடுதுறை ஆதீன மடத்தோடு இணைந்திருக்கிறது. அம்மை பசு வடிவாய் இருந்து பூசை செய்தபடியால் இப்பெயர் உண்டாயிற்று. திருமூல நாயனார், இமயத்தில் இருந்து ஆகாய வழியே அகத்தியரை தரிசிக்க பொதியமலை செல்லும்போது, இங்கு வந்து, அரசின் கீழே யோகத்தில் இருந்து, ஆண்டுக்கு ஒரு பாடலாக, மூவாயிரம் பாடல் கொண்ட திருமந்திரத்தை அருளிச் செய்தவர். அவருக்கு கோயிலின் மேற்குப் பிராகாரத்தில் தனியே சந்நிதி உண்டு. திருவிசைப்பா அருளிச்செய்த திருமாளிகைத்தேவர் வாழ்ந்த தலம். சம்பந்தரின் தந்தையார், தாம் வேள்வி செய்ய பொருள் வேண்டும் என்றபோது, சம்பந்தர் பதிகம் பாடி, இறைவன்பால் பொற்கிழி பெற்றுக் கொடுத்தார்.

மயிலாடுதுறை-தஞ்சாவூர் மார்க்கம், நரசிங்கன்பேட்டை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 2 கி.மீ. ரயில், பேருந்து பயண வசதிகள் உண்டு. அம்மார்க்கம் மணல்மேடாக செல்லும் பேருந்தில் சென்று, மடத்து வாயிலில் இறங்கலாம்.

சோழநாடு, காவிரி தென்கரை : 36

திருவிசயமங்கை

இறைவர் : விசயநாதர்
இறைவி : மங்கைநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தீர்த்தம் : அருச்சுன தீர்த்தம்

ஊர் சிறிது. கோயிலும் சிறிது. விசயன் (அர்ச்சுனன்) பூசித்ததால் இப்பெயர் பெற்றது.

கும்பகோணத்துக்கு வட-மேற்கே 20 கி.மீ. பயண வசதி உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 47

திருவெண்ணியூர் (கோயில் வெண்ணி)

இறைவர் : வெண்ணிக்கரும்பர், வென்னியநாதர்
இறைவி : அழகியநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 2 = ஆக 3

அளவான கற்கோயில். மூலவர் சுயம்பு. கோயில் மணல் வெளியில் இருக்கிறது. இங்குள்ள விழாத்திருமேனிகள் எல்லாம் அழகாக அமைந்திருக்கின்றன.

தஞ்சை அம்மாபேட்டை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 4 கி.மீ. பயண வசதி உண்டு. எனினும் சிறிது சிரமம் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 102

திருப்பள்ளியின் முக்கூடல் (அரிக்கரியான் பள்ளி)

இறைவர் : முக்கோணநாதர்
இறைவி : மைமேவுகண்ணி

பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : கயா தீர்த்தம்

கோயில் சிறிது. கோயிலுக்கு முன் திருக்குளம் இருக்கிறது. இராமர் பூசித்த தலம். அவர் பூசித்த இலிங்கம் பளபளப்பாக இருக்கிறது.

திருவாரூருக்கு வடக்கில் உள்ள விற்குடி இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 2 கி.மீ. திருவாரூரில் இருந்தும் வரலாம். பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 86

திருப்பாசூர்

இறைவர் : பாசூர்நாதர், பாசூர்ப்பரஞ்சுடர்
இறைவி : பசுபதிநாயகி

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 1 = ஆக 3

அழகான சிறிய கோயில். பாசு – மூங்கில். இறைவர் மூங்கில் அடியில் தோன்றினர் ஆதலின் இவ்வூர் இப்பெயர் கொண்டது. கரிகால் வளவன் மீது சமணர் ஏவிய பாம்பை, சுவாமி தடுத்து, பிடித்து, ஆட்டி அருளினார். இங்கு 11 பிள்ளையார் சிலைகள் வெவ்வேறு அளவில், வரிசையாக உள்ளன நடராசர் திருமேனி மிக அழகு. கோயிலைச் சுற்றி ஒரு பழைய கொட்டை இருந்தது.

சென்னை-அரக்கோணம் மார்க்கம், திருவள்ளூர் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. சென்னையில் இருந்து திருவள்ளூர் 42 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

தொண்டைநாடு : 16

திருவாய்மூர்

இறைவர் : வாய்மூர்நாதர்
இறைவி : பாலினும் நன்மொழியாள்நாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 2 = ஆக 3

சிறிய கோயில். 3 நிலை இராச கோபுரம். மாடக்கோயில். தியாகேசர் சந்நிதி சிறப்பு. ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. நீலவிடங்கர். ஆடுவது கமல நடனம். நீலவிடங்கர் சிறிது. கூடவுள்ள ஸபடிதலிங்கம் அதிற் பெரியது. நாவுக்கரசரும், சம்பந்தரும் திருமறைக்காட்டிலே மறைகளால் காப்பிடப் பட்ட கதவுத்தினை, நாவுக்கரசர் திறக்கச் செய்த அருமையையும், சம்பந்தர் பூட்டச் செய்த எளிமையையும் நினைந்து வருந்தியபோது, “திருவாய்மூருக்கு வா” என்று அழைத்து, இருவருக்கும் காட்சி கொடுத்த தலம். இங்கு ஏழு வைரவ மூர்த்திகள் ஒரே இடத்தில் உண்டு.

எட்டுக்குடியில் இருந்து 5 கி.மீ. திருக்கோளிலியில் இருந்து 3 கி.மீ. திருவாரூரில் இருந்து 24 கி.மீ. பேருந்து வசதிகள் மிகவும் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 124

திருநீலக்குடி (மனோக்ஞய நாத சுவாமி கோயில்)

இறைவர் : நீலகண்டேசுரர், நல்ல நாயகேசுரர்
இறைவி : உமையம்மை, அழகம்மை

பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : வன்னீலம்
தலமரம் : வில்வம் (5 இதழ் கொண்ட); பலா சிறப்பு

சிறிய கோயில். கோயிலுக்கு முன் திருக்குளம் உண்டு. அம்மன் கோயில்கள் இரண்டு. பக்தாபீஷ்டப்ராதாயநீ சுவாமியை மணக்க தவம் செய்த இடம். அநுமஸ்தநிசனனனி மணம் செய்த இடம். கோயிலில் உள்ள மரங்களின் பழத்தை சுவாமி படையல் பண்ணாது, வெளியே கொண்டு போனால், அவை புழுப்பிடித்து, அழுகிவிடும். நல்லெண்ணெய் அபிடேகம் செய்தால், அதில் பாதி இலிங்கத்தில் சுவறிவிடும். நாவுக்கரசரை சமணர் கல்லினோடு கட்டி, கடலில் இட்டதற்கு, அப்பர் பாடிய “கல்லினோடு என்னை” என்ற அகச்சான்றுப் பதிகம் இங்கு பாடப்பட்டதாகும்.

மயிலாடுதுறை-கும்பகோணம் மார்க்கம், ஆடுதுறை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 4 கி.மீ உம், திருவிடைமருதூர் நிலையத்தில் இருந்து 8 கி.மீ உம் ஆகும். எல்லா பயண வசதிகளும் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 32

திருநெய்த்தானம்

இறைவர் : நெய்யாடியப்பர்
இறைவி : பாலாம்பிகை

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 5 = ஆக 6
தீர்த்தம் : காவிரி

சிறிய கோயில். ஏழு ஊர்களில் (சப்த ஸ்தானங்கள்) எழாவது. தக்ஷிணாமூர்த்தி நின்ற கோலத்தில் உள்ளார். நெய்யாடுதல் என்பது ஒருவகை விழாக் கொண்டாட்டம். 5 நிலை இராச கோபுரம்.

தஞ்சாவூர் இருப்புப்பாதை சந்திப்பு நிலையத்தில் இருந்து, பேருந்து வழியாக 15 கி.மீ. திருவையாற்றில் இருந்து 2 கி.மீ. பயண வசதிகள் நிறைய உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 52

திருக்கழிப்பாலை

இறைவர் : பால்வண்ணநாதர், கங்காநாயகன்
இறைவி : தேவநாயகி

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 5 + சுந்தரர் 1 = ஆக 8
தீர்த்தம் : கொள்ளிடம்

பக்கத்திலே உள்ள திருநெல்வாயில் (சிவபுரி) கோயில் போல, அளவான சிறிய கோயில். இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் ¼ கி.மீ. இத்தலம் முன்னர் கொள்ளிட நதியின் வடகரையில், காரைமேடு என்னும் இடத்தில் இருந்தது. அக்கோயில் கொள்ளிடத்தின் வெள்ளப்பெருக்கால் அழிந்துபோக, எஞ்சியிருந்த திருமேனிகள், கல் முதலியவற்றையும் திருத்தொண்டர்கள் திருநெல்வாயில் தலத்துக்கு கொணர்ந்து, அமைத்து எழுப்பப் பட்டுள்ளது. மூலமூர்த்தி வெண்மையான அழகிய திருமேனி. வன்மீக முனிவர் பூசித்து.

இத்தலம் சிதம்பரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவிலும், சிதம்பரம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது. சிதம்பரம்-அண்ணாமலை பல்கலைக்கழக பேருந்துகளில், அங்குள்ள இராசேந்திரன் சிலை வரை சென்று, பின் சிறிது தூரம் கால் நடையாக செல்ல வேண்டும். இது திருப்தியான பயண வசதி.

சோழநாடு, காவிரி வடகரை : 4